Tuesday, November 9, 2021
இருக்கண்குடி உண்மை வரலாறு
இன்று இருக்கண்குடி மாரியம்மனை வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் இருக்கண்குடி யின் வரலாறு பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு முன்பிருந்து தொடங்குகிறது. கி.பி. 1300 களில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்து வந்த இளவரசர் சுந்தரபாண்டியன் மற்றொருவர் சிதம்பரம் பகுதியை ஆட்சி செய்து வந்த இளவரசர் வீரபாண்டியன். சுந்தரபாண்டியனை விட வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவராய் வீரபாண்டியன் இருந்ததால் அடுத்த அரசராக வீரபாண்டியனுக்கு பட்டம் சூட்டினார் மன்னர் குலசேகரபாண்டியன். தனக்கு உண்டான உரிமை மறுக்கப்பட்டு வீர பாண்டியனை அரியணையில் அமர வைக்க முயற்சி செய்வதைக் கண்டு வெகுண்டு எழுந்து தன் தந்தையான குலசேகர பாண்டியனை கொன்று அரியணையில் அமர்ந்தான் சுந்தரபாண்டியன். இதனால் கோபமடைந்த வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையே போர் மூண்டது. முடிவில் தாக்குப்பிடிக்க முடியாமல் போரிலிருந்து பின்வாங்கி டெல்லியில் அலாவுதீன் கில்ஜியிடம் உதவி கோரினான் சுந்தரபாண்டியன். அலாவுதீன் கில்ஜியோ மாலிக் கபூர் தலைமையில் படையை உதவிக்கு அனுப்பி கி.பி .1310 மதுரை மீது போர்தொடுத்தார் முடிவில் உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த கதையாய் மதுரையைக் கைப்பற்றி கொள்ளையடித்து , பல பகுதிகளை சேதப்படுத்திவிட்டு தலைநகர் திரும்பியது மாலிக் கபூரின் படை. அதிலிருந்து தொடங்கியது பாண்டியர்களின் வீழ்ச்சி.
இதைப் பயன்படுத்தி கி.பி. 1311ல் சேர மன்னன் இரவிவர்மன் மதுரையை கைப்பற்றினான், அதன் பின்னர் தொடர் தோல்விகளாள் பாண்டிய பேரரசு பல சிற்றரசாக பிரிக்கப்பட்டது. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிற்றரசன் மதுரையை மீட்டு மீண்டும் மீன் கொடியை நாட்டினான். பாண்டிய சிற்றரசர்கள் இடையே ஒற்றுமை இன்றி மோதல் நடந்து கொண்டே இருக்கவே மதுரையை கைப்பற்றியது கிருஷ்ணதேவராயரின் நாயக்கர் அரசு. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த பாண்டிய பேரரசு பல சிறு நாடுகளாக சிற்றரசாக பிரிக்கப்பட்டது .அதை பாண்டிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளில் அளற்று நாடு, ஆன்மர்நாடு, இருஞ்சோ நாடு, கண்ட நாடு ,காண ஞாயிறுக்கை நாடு, கருநீலக்குடி நாடு, சாழ் நாடு, செங்கொடி நாடு ,திருமல்லி , வயலூர் நாடு, வெண்பை குடி நாடு, வெண்பு நாடு போன்ற நாடுல் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் அடக்கம். இவற்றுள் இருஞ்சோ நாடு என்பது கி. பி .831ல் அதாவது பாண்டிய பேரரசின் வீழ்ச்சி தொடங்கப்படுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கன்குடி (இருப்பைகுடி) கிராமத்தை மையமாக கொண்டு இருப்பை குடி கிழவன் என்னும் இருப்பை குடி எட்டி சாத்தன் என்னும் சிற்றரசன் ஆட்சி செய்துவந்துள்ளார். இவர் இருக்கண்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களை வெட்டி நீர் மேலாண்மையை ஏற்படுத்தி விவசாயத்திற்கு வழிவகை செய்துள்ளார். (டாக்டர் ராஜேஸ்வரியின் தேவேந்திரன் புத்தகம் பக்கம் எண் 18).
இருக்கண்குடி கிராமத்திற்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் வரலாற்று பூர்வமாக ஆதாரத்துடன் விளக்க இயலுவது இலுப்பை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இலுப்பைகுடி என்று அழைக்கப்பட்டு பின்னர் இருப்பை குடி என்று மருவபெற்று தற்போது இருக்கண்குடி என்று அழைக்கப்படுகிறது. இருப்பைகுடி என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் இதை நிரூபனம் செய்கின்றன.
" மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
- தொல்காப்பியர்.
பாலை என்பது தனி நிலம் அல்ல குறிஞ்சியும் முல்லையும் தன் நிலை மாறி செழிப்பிழந்து வறண்ட பகுதியை பின்னாளில் பாலை என்று அடையாளம் ஆயிற்று. எனவே தொல்காப்பியர் நால்வகை நிலத்தையும் அதன் தெய்வத்தையும் வகைபடுத்தியுள்ளார் அதில் மருத நிலக் கடவுளை வேந்தன் என்று அடையாளப்படுத்துகிறார் .திணையில் முதலாவது குறிஞ்சி என்றாலும் மனித நாகரிகம் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்னவோ மருதத்திணையில் வேளாண் மரபினர் இடையே தான். தேவைக்காக உணவு சேகரிக்கும் வழக்கம் மாறி தனது சமுதாயத்திற்காக மானுட சமூகத்திற்காக முதன் முதலில் உணவை உற்பத்தி செய்யத் தொடங்கியது இந்த மருத நிலத்து வேளாளர் என்று அழைக்கப்படக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் என்னும் மள்ளர் மக்கள்தான். வேளாளர் என்ற சொல் வேளாண்மை செய்யக்கூடிய மருதநில விவசாயிகளை இ குறிக்கிறது என்று தேவநேயப் பாவாணர் தமிழர் வரலாறு என்னும் தனது நூலில் கூறுகிறார். வேளாளருக்கும், வேளாருக்கும் வேறுபாடு உண்டு. வேள் என்றால் மண் என்றும் தலைவன் என்றும் இருபொருள் படும். வேளார் = வேள்+ ஆர் மண்ணை வைத்து பிழைப்பு/ தொழில் செய்பவர்கள், உதாரணத்திற்கு :மண் பானை, மண் பொம்மை போன்ற பொருட்கள் செய்து வணிகம் செய்யக்கூடியவர்கள் வேளார் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர் = வேள்+ஆள்+அர்(வேள்=மண், ஆள்=ஆள்பவர்/ஆளுமை, அர்=வினைமுற்று விகுதி)
வேளாண்மை = வேள்+ஆண்மை
ஆண்மை எனப்படுவது ஆடவரை குறிக்காது, மாறாக ஆளும் தன்மை எனப் பொருள்படும், அவ்வாறு நிலத்தை வேளினை தனது தேவைக்கேற்ப பண்படுத்தி அந்த நிலத்தை ஆளும் தன்மை வேளாண்மை எனப் பொருள் காணப்படுகிறது. நிலத்தை ஆளும் தன்மை உடையவர் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு கி .பி. 831 கால கட்டத்திலேயே மருத நில மக்களான குடும்பர், மடையர், வேளாளர் என அழைக்கப்பட்டு தற்போது தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் மருதநில மக்கள் ஏரி குளங்களை வெட்டி, நீர் மேலாண்மை ஏற்படுத்தி இருஞ்சோ நாடு என்னும் சிற்றரசாக வளமுடன் இருந்த நாடு தான் இன்றைய இருக்கன்குடி.
இங்கு வாழ்ந்த இருக்கண்குடியில் பூர்வ குடிமக்களாகிய மருதநில வேளாண் குடிமக்கள் இயற்கையோடு ஒன்றி பாண்டிய மக்களுக்கே உரித்தான ஆதி வழிபாட்டு முறைகளான மால் (திருமால், பெருமால்) வழிபாடு , சேயோன் (முருகன்) வழிபாடு, வேந்தன் (இராசா, அரசன்)வழிபாடு, முன்னோர் வழிபாடு என சைவ வைணவ சமயங்களுக்கு முன்பிருந்த தமிழர்களின் ஆதி வாழ்வில் நெறியான ஆசீவக கோட்பாட்டின்படி வாழ்ந்து வந்துள்ளனர். ஆசீவகம் என்பது தமிழ் பூர்வகுடிகளான பாண்டிய மக்கள் மருத நில மக்களின் நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் செழிப்பாய் வளர்ந்திருந்த வாழ்வியல் முறை இதற்குப் பின்னரே சைவம், வைணவம், சமணம் ,பௌத்தம் போன்ற சமயங்கள் தோன்றின. ஆசீவக கோட்பாடு என்பது 18 நிலைகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட நிலைகளுக்கு குறிப்பிட்ட நிறம் அடையாளமாய் காட்டப்படும் .கருப்பு வண்ணத்தில் தொடங்கி வெள்ளை வண்ணத்தில் முடிவடையும் இவ்வாறு 18 நிலைகளையும் கடந்த ஒருவன் மற்றவர்களின் சந்தேகங்களுக்கு , குறைகளுக்கு தீர்வு கொடுக்க இயலும். அத்தகைய நிலையை அடைந்த ஒருவனை அய்யன் என்று அழைத்து வந்துள்ளனர். பின்னாளில் இவரை மரியாதை நிமித்தமாய் "ஆர்" என்கிற விகுதி சேர்த்து அய்யனார் என்று அழைத்துள்ளனர். அய்யனாருக்கு (18 நிலை கடந்த துறவிகளுக்கு) வழங்கப்பட்ட வேறு பெயர்கள் :
அய்யன் -> அய்யனார் -> ஐயனார்
சாத்தன் -> சாஸ்தா
முனி
சித்தன் -> சித்தர்
அண்ணன்
இவ்வாறு 18 நிலைகளைக் கடந்து மனிதர்களை பின்னாளில் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதோடு குறிஞ்சி நிலக் கடவுளான திருமால் வழிபாடும் முல்லை நிலக் கடவுளான சேயோன் (முருகன்) வழிபாடும் மருத நிலத்திற்கு உரித்தான மருதநில வழிபாடான வேந்தன் (ராசாக்கள்) வழிபாடும் ஆசிவக கோட்பாட்டின் ஆதியான முன்னோர் வழிபாடும் ஒருசேர இருக்கன்குடியில் மருத நில மக்களாகிய மள்ளர் மக்களிடத்தே வணங்கப்பட்டு வந்துள்ளது .
ஆசீவகம் பெயர்க்காரணம்:
ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஈவு என்பது விடை, தீர்வு என்று பொருள் படும் .ஆசு என்பது செம்மை செழுமை எனப் பொருள்படும். அந்த காலத்தில் செம்மையான கவியை ஆசுகவி என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசீவகம் என்பது செம்மையான தீர்வு கிடைக்கும் இடம் என பொருள்படும். (உணவு கிடைக்கும் இடம் உணவகம் என்று கூறப்படுவது போல அருமையான தீர்வு கிடைக்கும் இடம் என்பதால் ஆசீவகம் என்று அழைக்கப்பட்டது).
தகவல் : Er. மு.காசிராசன் B.E., இருக்கண்குடி.
தகவல் 1: இருக்கண்குடி வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...

No comments:
Post a Comment