Thursday, March 26, 2020

வாசிப்பை சுவாசிப்போம்

    வாசிப்பை சுவாசிப்போம்
முன்னுரை:                                                                           
வீட்டிற்குள் வெளிச்சம் வர உதவுவது சாளரம் (ஜன்னல்) அது போல மனதிற்குள் வெளிச்சம் வர உதவுவது வாசித்தல். வாசிப்பில்லா மானுடம் என்பது ன்னல் இல்லா சத்திரத்திற்கு ஈடானது. அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவு என்னும்  வெளிச்சத்தை மனது எனும் அறைக்குள் அனுமதிக்கும் ஜன்னல் தான் இந்த வாசித்தல். இந்த வாசிப்பை பற்றி சிறு தொகுப்பாக இந்த கட்டுரையில் காண்போம்.
வாசித்தலும் சுவாசித்தலும்:
தலைப்பைக் கேட்டவுடன் சிலருக்கு விந்தையான தலைப்பாய் தெரியலாம். சிலருக்கு வாசிப்பை எப்படி சுவாசிப்புடன் ஒப்பிட இயலும்.? என்ற கேள்வி எழலாம். சுவாசித்தல் என்றால் என்ன.? நல்ல காற்று (ஆக்சிஜன்) உள்ளே சென்று அசுத்த காற்றை (கார்பன் டை ஆக்சைடு) வெளியேற்றுவது தான். இது போன்ற நிகழ்வு தான் வாசித்தலிலும் நடக்கிறது . நல்ல வாழ்வை வளமாக்கும் கருத்துக்கள் உள்ளே சென்று மனதில் உள்ள தீய எண்ணங்களை வெளியேற்றுகிறது.
இந்த இரண்டு நிகழ்வின்போதும் ஒரு சிறிய சத்தம் கூட கேட்காது, தேவையும் படாது. இதைத்தான் எமர்சன் எனும் அறிஞர் கூறுகிறார். ஓசையின்றி நடக்கிறது புத்தக வாசிப்பு என்று.
அகத்தின் மலர்ச்சி புத்தகத்தில்:
நல்ல புத்தகங்களை வாசிப்பதனால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைக்கப்பட்டு நல்ல நேர்மறை எண்ணங்கள் விதைக்கப்படுகிறது. எனவே தான் சுவாமி விவேகானந்தர் கூறுவார் ஒரு நூலகம் திறக்கப்படுமாயின் பல சிறைச்சாலைகள் மூடப்படும் என்று.
புத்தக வாசிப்பின் பொழுது பல புதுபுது அனுபவங்களைப் பெற முடியும் ஏனென்றால் சில புத்தகங்களின்  சில பகுதிகள் யாரோ ஒருவரின் அனுபவமாய் இருக்க கூடும். என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
புத்தகம் ஒரு சிறந்த துணை நமக்கு மகிழ்சியை கொடுக்கும்,  புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி வளர்ச்சிபாதையை காட்டும்.    புத்தகம் ஒரு சிறந்த நண்பன் நம்மை வளர்ச்சிபாதையில் அழைத்து செல்லும்.
 கண்ணோட்டத்தின் அடிப்படையில் கருத்து:
ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வரியும் ஒரு கருத்தை நம் மனதில் விதைக்கும். அவரவர் கண்ணோட்டத்திற்கு ஏற்ப புத்தகத்தில் அச்சிடப்பட்ட கருத்துக்கள் கூட நம் கண்ணோட்டத்திற்கு ஏற்ப மாறுமா என சிலர் வினவுவர். ஆம் உதாரணத்திற்கு ஒரு கவிஞர் எழுதியிருக்கிறார் எறும்பை பார்த்து கற்றுக்கொள்ளுஙகள் என்று . இரண்டு வகையான வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள் . ஒருவர் கூறுகிறார் எறும்பை பார்த்து கற்றுக்கொண்டேண் எப்படி சேமிப்பது என்று. மற்றொருவர் கூறுகிறார் எறும்பை பார்த்து கற்றுக்கொண்டேண் எப்படி பதுக்குவது என்று. நிகழ்வு ஒன்று தான் கவிஞர் கூறியதும் ஒன்று தான். புரிந்து கொண்டவர்கள் தான் தனித்தனி கண்ணோட்டம் கொண்டவர்கள். எனவே அவர் அவர் கண்ணோட்டத்திற்கு ஏற்ப கருத்துகள் கிடைத்துள்ளது.
                               கம்பராமாயணம் என் மனதில் ஓர் கருத்தை ஆழமாக விதைத்து அது என்னவென்றால் நாம் செய்கின்ற செயலை சரியென்று நிருபிக்க தெரிய வேண்டும். இல்லை என்றால் நாம் செய்த காரியம் சரியானதாய் இருந்தாலும் கூட அது தவறாகவே சித்திகரிக்கப்படும். இராமயணத்தில் இராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்தி வீழ்த்திவிடுகிறார் என்பது நாம் அறிந்ததே. அந்த வேளையில் வாலிக்கும் இராமனுக்கும் இடையே ஒர் உரையாடல் நிகழ்கிறது . நம்மில்பலர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை . வாலி கூறுகிறான் இராமா உன்னா பற்றியும் உன் வீரத்தைப் பற்றியும் நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் எதிராளியுடன் யுத்தம் செய்து கொண்டு இருக்கின்ற வேளையில் மறைந்து நின்று அம்பு எய்தி என்னை தாக்கியிருக்கின்றாயே இதுதான் உன் வீரமா என்று கூறுகிறான். 
                                    இந்த இடத்தில் இராமன் கோபமாகவோ உணர்ச்சிவசப்பட்டோ பதில் கூறியிருந்தால் இல்லை கூறமுற்பட்டிருந்தால் தவறாய் போய் முடிந்து இருக்கும். இராமனே தவறு செய்து விட்டான் என்ற பழி ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும். இராமன் தான் செய்தது சரியே என்று எவ்வாறு நிருபிக்கிறார் என்றால் .  நீ சகோதரனின் மனைவியையும் இராஜ்ஜியத்தையும் கவர்ந்து வைத்துள்ளாய் என்று இராமன் கூறிக்கொண்டிருகிகும்போது வாலி குறுக்கிட்டு கூறுகிறான் நாங்கள் ஒன்றும் மனிதர்கள் கிடையாது வாண்ரயினங்கள் எனவே எங்களுக்கள் உறவுமுறைகள் கிடையாது  என்கிறான். பின் இராமன் கேட்கிறான் அப்போ நீ விலங்கு என்பதை ஒப்புகொள்கிறாயா? என்று. வாலியும் ஆம் என்று ஒப்புகொண்டவுடன் இராமன் கூறுகின்றான் அப்படியானால் விலங்கை மறைந்து நின்று தான் வேட்டையாடுவார்கள். நேருக்கு நேர் நின்று மல்யுத்தம்புரியமாட்டார்கள். இப்போது சொல் நான் செய்தது சரிதானே என்று கூறுகிறார். உடனே வாலியும் ஆமாம் நீ செய்தது சரியே என்று ஒப்புகொள்கிறான்.
                                                 நமது எண்ணங்களையும் கவலைகளையும் மாற்றும் சக்தி ஒரு புத்தகத்திற்குண்டு. எனவேதான் சிக்மன்ட் பிராய்டு என்னும் மனோ தத்துவ அறிஞர் கூறுகிறார் உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியமோ அது போல்தான் மனதிற்கு புத்தக வாசிப்பு அவசியமென்று.
வாசித்தலின் வகைகள்:
பொதுவாக வாசித்தலை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகயில் மூன்ற பிரிவாய் வகைப்படுத்தலாம்.
1.       மேலோட்டமாக வாசித்தல். இது அன்றாடம் செய்தித்தால் வாசிப்பது, ஏதேனும் சுவரொட்டியை வாசிப்பது. மீண்டும் கேட்டால் சொல்லத்தெரியாது.
2.        ஒரு பத்தியை வாசித்து பின்னர் நமக்கு தெரியாதது எதை சொல்லியிருக்க போகிறார்கள் என்றும் எண்ணிக்கொண்டு புத்தகத்தை தலைக்கு வைத்து தூங்கிவிடுதல், இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி பாடபுத்தகங்களை வாசிப்பது இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
3.       ஒரு பத்தியை படித்து அதில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு அதன்பின் ஆர்வத்துடன் அடுத்த பகுதியை படித்தல் இந்த மூன்றாவது வாசித்தல் தான் சுவாசித்தலுக்கு ஒப்பான வாசித்தலாகும்.
வாசிப்பை சுவாசித்தவர்கள் :
             காமராஜரை  நாம் படிக்காத மேதை என்போம் சிலர் அவரை படிக்காதவர் என்று மட்டம் தட்டுவர். காமராஜர் பள்ளிப்படிப்பும் பட்டபடிப்பும் படிக்கவில்லையே தவிர ,அவர் வாழ்ந்த இல்லத்தை சென்று பார்த்தால் அவர் எவ்வளவு புத்தகங்களை படித்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும் தமிழ் மட்டும் அல்ல ஆங்கில் நூல்களையும் படித்து ஆராயத்தெரிந்தவர் அவர்.
                  முனைவர் அம்பேத்கர் அவர்கள் லண்டனுக்கு அரசியல் அமைப்பு சட்டம் இயற்றவும் அங்குள்ள அரசியல் நிலைகளை அறிந்து கொள்ள சென்றபோது அவருக்கு தங்குமிடம் எங்கு வேண்டும் என்று கேட்ட பொழுது சிறிதும் யோசிக்கமால் நூலகத்தில் நான் தங்கி கொள்கிறேன் எனக்கு நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.
                                     முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் பதவியில் இருந்த பொழுது ஏகப்பட்ட அறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. எனக்கு இரண்டு அறைகள் போதும் ஒன்று படிக்க மற்றோன்று தூங்க மற்ற அறைகளை அடைத்துவிடுங்கள் என்று எளிமையாய் கூறினார்.
முன்னால் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு முறை, நான் இறந்த பின் மலர்களை என் சமாதி மீது பரப்பாதீர்கள். அதற்கு பதிலாக புத்தகங்களை என் சமாதி மீது பரப்பிவையுங்கள் என்றார்
                   பேராரிஞர் அண்ணா  தனது அறுவை சிகிச்சைக்காக சென்றிருந்த போது தனது அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டார் . ஏன் என்று மருத்துவர் கேட்டதிற்கு நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு நாள் கிடைத்தால் முடித்துவிடுவேன் என்றார்.
                                        பகத்சிங் அவர்களோ தேசத்திற்காக தன் உயிரை துச்சமென நினைத்து தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார்.
முடிவுரை:
  மனதிற்கு வலிமையையும் அறிவையும் கொடுப்பது இந்த புத்தகவாசிப்பு ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் ஒரு புத்தகத்தை நேசித்து வாசித்தால் அது நம் வாழ்வை வளமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வாசிப்பை சுவாசித்து வளமுடன் வாழ்வோம்
          ஆசிரியர்  : மு.காசிராஜன் B.E.

1 comment:

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...