Thursday, December 19, 2019

எதை சேமிப்பது?

kasimani


     :

                                  




எதை சேமிப்பது?




    



இயற்கை எழில் கொஞ்சும் இருகங்கைகுடி என்னும் கிராமம் . பெயருக்கு ஏற்றார்போல் இரண்டு கங்கைகள் கொஞ்சிவிளையாடும் அழகிய கிராமம்.அந்த கிராமத்தில் ராஜா என்று ஓர் இளைஞன் இருந்தான் .அவன் ஒரு பெரும் சிந்தனையாளனாக இருந்தான்,மற்றவர்களைப்போல் எல்லோரும் ஒரு செயலை செய்கிறார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செய்யமாட்டான் ஏன்? எதற்கு? என வினவி ஆராய்ந்து அதன் பின்னரே அச்செயலை செய்துமுடிப்பான்.

அந்த இருகங்கைகுடியில் வருடந்தோரும் விழாக்கோலம்தான்.மாதம் ஒரு பொங்கல்,விழா,கலைநிகழ்சிகள் என்று சொந்தபந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாவினை கொண்டாடுவார்கள் இப்படி ஒற்றுமைக்கு 
குறைவின்றியும், மகிழ்ச்சிக்குப் பஞ்சமின்றியும் , ஆண்டுக்கு மூன்றுபோகம் விளைந்து விவசாயம் செழித்தும், கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை  பசுமை போர்வை போர்த்திய நிலங்கள் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டும் இருக்கும் இந்த கிராமம். இத்தகைய அழகிய கிராமத்தை விட்டுச்செல்ல  யாருக்கும் மனம் வராதுதான் இருப்பினும் காலத்தின் கட்டாயத்தால் மேற்படிப்பிற்காக வெளியூரில் சென்று தங்கிப்படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது நம் ராஜாவிற்கு.

சில ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தான் ராஜா. அங்கே அவனுக்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்தது அவன் பார்த்து வளர்ந்து வந்த அந்த அழகிய கிராமம் சிலபல மாற்றங்களை சந்தித்திருந்தது எந்த ஒரு விழாவும் ஒற்றுமையுடன் சிறப்பாய் நடைபெறவில்லை ,வயல்வெளி சென்று பார்த்தான் பொன்விளைந்த பூமியில் இடத்தகராறு, தண்ணீர்ப் பிரச்சனை,சொத்துப்பிரச்சனை காரணமாய்  முட்செடிகள் முளைத்துக்காணப்பட்டது. கோவில்களை சென்று பார்க்கிறான் ஒன்றுகூடி நடத்திய திருவிழாக்கள் ஏதும் இல்லாமல் தனித்தனியே சென்று வழிபட்டு வந்து கொண்டிருந்தனர்.

இந்த திடீர்மாற்றதின் காரணம் தெரியாமல் தன் நெருங்கிய தோழியான கண்மணியை சந்திக்கச் சென்றான்.பெயருக்கேற்றார்போல் ஈர்ப்புவிசையை கவர்ந்துவைத்துள்ள அழகிய கண்களைக் கொண்டவள் ,நேர்கொண்ட பார்வையுடன் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் அழகிலும் அறிவிலும் சிறந்தவள்.அவளிடம் தான் கண்ட நிகழ்வுகளைப்பற்றி வினவினான்.அவளும் ராஜாவைப்போலவே ஒரு சிந்தனையாளர் .முன்புபோல் எல்லாம் இல்லை ராஜா ஒவ்வொருவருக்கும் தான் தான் மற்றவர்களை விட பெரியவன் என்ற எண்ணம் மனதிற்குள் வந்துவிட்டது அதன் காரணமாய் மற்றவர்களை இகழ்வாய் பேசியும் உதவமறுத்தும் வருகின்றனர்.
            முன்பு இருந்த ஒற்றுமை இவர்களிடத்தே இல்லை.இதை பயன்படுத்தி  பல்வேறு தனியார் நிறுவனங்களும் இவர்களது நிலத்தை கையகப்படுத்த காத்துக்கொண்டிருக்கின்றன .இது இவர்களுக்கு புரியவில்லை என்றாள்.இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்  சாலையில் ஒருவரை நான்கு நபர்கள் சேர்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர். ராஜாவிற்கு இனம்புரியாத கோபம் அவர்களை அடித்து தள்ளிவிட்டு அந்த மனிதரை காப்பாற்றினான்.
            அதன்பின் தான் புரிந்தது அந்த மனிதர் வேறுயாரும் அல்ல தனது தாய்மாமா ராஜேந்திரன் என்பது,அந்த கிராமத்திலேயே அவர்கள் குடும்ப உறவினர்கள் தான் அதிகம் இன்றோ சொந்தபந்தம் கூட வேடிக்கைதான் பார்துக்கொண்டிருந்தது  காரணம் அவரிடம் பணம் அதிகம் இருந்தபோது யாரையும் மதிக்காமல் இருந்தார் எனவே இன்று   யாரும் உதவ முன்வரவில்லை .அப்போது தான் தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழிக்கு அர்த்தத்தை உணர்ந்தான் ராஜா.ராஜாவும் கண்மணியும் இணைந்து ஓர் முடிவெடுத்தனர்.

ராஜாவின் சித்தப்பா ராஜமானிக்கம் தான் ஊர் நாட்டாமையாய் இருந்தார். அவர் மூலம் ஊர்க்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.கண்மணியும்  ராஜாவும் இணைந்து தங்கள்  அனல் பறக்கும் பேச்சால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து அவர்கள் மனதில் ஒற்றுமை எண்ணத்தை விதைத்தனர்.என்னதான் நன்மை செய்தாலும் திறம்பட பேசினாலும் அதை கலைத்துவிடவும் குறுக்குக்கேள்வி கேட்க நான்கு பேர் இருப்பார்கள் அல்லவா,ஏன் நாங்கள் தனியாக வழிபட்டு படையலிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாதா என்று கேட்டனர்.கண்மணியும் ராஜாவும் சிறந்த சிந்தனையாளர்கள் அல்லவா சாமிக்கு படையலிட வேண்டும் என்றால் சமைத்த உணவு அனைத்தையும் மொத்தமாக அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடலாமே ஏன் அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு அதே இடத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ணுகிறீர்கள்? என்று கேட்டனர்.
அவையில் அமைதி நிலவியது .பின் ராஜாவும் கண்மணியும் தொடர்ந்து பேசினர், திருவிழா நடத்துவதே சொந்தபந்தங்கள் ஒன்றுசேரத்தான் ஒற்றுமையுடன் வாழத்தான்.ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை உணர்த்ததான் சமமாய் அமர்ந்து சாப்பிடுகிறோம் .இதை உணர்ந்து இனியாவது ஒன்றுகூடிவாழ்வோம் அன்பைசேமிப்போம் என்றனர்.

 இறுதியாக கண்மணி கூறினாள், இன்றைய காலக்கட்டத்தில்   சேமிக்கவேண்டியது சொத்துசுகத்தை அல்ல சொந்தபந்தங்களை என்று.அனைவரும் ஏற்றுக்கொண்டனர் அந்த கிராமம் பழைய நிலைமைக்கு மாறத்தொடங்கியது. அன்பை சேமித்து ஆனந்தமாய் வாழ்வோம்.ராஜா கண்மணியின் பயணம் தொடரும்………………………..
                                                                                
                                                                                                                      - மு.காசிராஜன்
     
மு.காசிராஜன்
    

2 comments:

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...