kasimani
Wednesday, October 26, 2022
கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்னர் இந்த கிராமம் இருப்பைகுடி என்றழைக்கப்பட்டு இருஞ்சோ(ழ)நாடு என்றழைக்கப்பட்ட நாட்டின் தலைநகராக இருந்துள்ளது.இதை நாம் வராலாற்று தரவுகளின் மூலம் அறியலாம். இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் சில நிகழ்வுகளை வராலாற்று இடைச்செருகளை நாம் சில ஆவணங்களின் துணை கொண்டு அறிந்துகொள்ள முடிகிறது.அதே போல் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கூட இந்த இருப்பைகுடி என்றழைக்கப்பட்ட இருக்கண்குடியின் வரலாறு குறித்து அறிந்துகொள்ள முடிகிறது ஆனால் பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் கி.பி. 13 ம் நூற்றாண்டிற்கு பிறகு சரிவர அறிந்துகொள்ள முடிவதில்லை .அதிலும் கி.பி.1857 முதல் கி.பி.1990 வரையுள்ள கால கட்டத்தில் சில அதீத நம்பிக்கையாளும் , முரட்டுத்தனத்தாலும் ,அளவுக்குமீறிய நம்பிக்கையினாலும் , சில சதிகாரர்களின் சூழ்ச்சியினாலும் இந்த கிராமத்தின் பாண்டிய மரபினரின் உண்மையான வரலாறு புறக்கணிக்கப்பட்டு போலியான வரலாறு புகுத்தப்பட்டது. இயற்கை தன்மை என்பது தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுதல் , அதுபோல வரலாறும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் திருத்தி எழுதப்படும். முன்பொரு காலத்தில் இன்று பிரபலமாக வணங்கப்பெரும் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் குறைவான மக்களே வந்து வணங்கி செல்வர் காரணம் அம்மன் சக்திவாய்ந்தவராக இருந்தாலும் ஆற்றுக்கு நடுவினிலே இருக்கின்ற அம்மனை வணங்க வேண்டும் என்றால் ஆற்றைக்கடக்க வேண்டும் .ஓடையளவு எந்நேரமும் ஆற்றில் ஓடிக்கொண்டு தான் இருக்கும் .அதுக்கும் மேல் ஆற்றுமணல் அவ்வளவு அழகாக பணிபோல் படர்ந்திருக்கும் நடந்து சென்றாலே கரண்டைக்கால் தரைக்குள் பதியும் அப்படி இருக்கையில் கோவிலுக்கு வருபவர்கள் வண்டிகட்டிக்கொண்டுதான் வருவார்கள் . அப்படி வரும்போது வண்டியின் சக்கரம் மணலில் பதிந்துகொள்ளும் அதை மீட்க்க அருகில் உள்ளவர்கள் உதவி செய்வார்கள் .அப்படி அதிகம் பிரபலியம் ஆகாத சமயம் என்பதாலும் , தொலைதூரம் வண்டிகட்டிக்கொண்டுவந்து வணங்கவேண்டியுள்ளதாலும் திருவிழா நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்துள்ளது . வரும் பக்தர்கள் தங்கி உணவருந்த ஏதுவாக கோவிலின் கிழக்கு வாசலின் முன்பு இருக்கண்குடி தேவேந்திர குல வேளாளர் மக்கள் கூரையினால் மடம் அமைத்து சேவை செய்து வந்துள்ளனர் . இங்கு வரக்கூடிய பக்தர்களில் அன்று முதல் இன்று வரை அம்மனுக்கு கிடாய் வெட்டி வழிபடுதல் என்பது தனிச்சிறப்பு அவ்வறு வரும் கிடாய்களை இருக்கண்குடியை சேர்ந்த ஊர்க்குடும்பர் அல்லது இருக்கண்குடியை சேர்ந்த முக்கிய நபர்கள் வெட்டுவது தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இருக்கண்குடி கிராமத்தினர் பல சவாலான சூழல்களை எதிர்கொண்டு வந்துள்ளனர் இருப்பினும் எந்த சூழ்நிலையிலும் தனது தன்மானத்திற்கு ஒரு இடர் என்று வந்தால் விட்டுக்கொடுக்காது அதில் வெற்றிகண்டும் வந்துள்ளனர். அவ்வகையில் இந்த வழக்கமானது ஏற்படக்காரணம் என்னவென்றால் அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் பஞ்சாயத்து தீர்ப்பின் மூலம் ஒரு நிரந்தர தீர்வை ஏற்டுத்திக் கொடுப்பதில் அந்த காலக்கட்டதில் இருக்கண்குடி சிறந்து விளங்கியுள்ளது. எந்த பஞ்சாயத்திலும் தீர்க்கமுடியாத பஞ்சாயத்து கூட இருக்கண்குடியில் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக அந்தகால பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். இதனடிப்படையில் நமது ஊரில் இன்னொருவர் அருவா எடுத்து வர கூடாது, தொழிலுக்காக கூட அருவா எடுத்து வந்து பிரிதொரு ஊர்க்காரர் வந்து வெட்ட கூடாது என்பதால் இருக்கண்குடி ஊர்க்குடும்பர் மற்றும் இருக்கண்குடி கிராம முக்கிய நபர்கள் மேற்படி பணியினை செய்துவந்தனர் . அதற்கு கிடைக்கும் காணிக்கையையும் , ஆட்டின் தலை மற்றும் கால்களை ஊர்க்குடும்பரிடம் கிடாய் வெட்டுபவர் ஒப்படைக்க வேண்டும் . அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர்நலனுக்கு பயன்படுத்துவார்கள். இந்த வழக்கம் எப்படி மாறியது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம் . அதற்கான விடை தான் சற்றுவினோதம் . இருக்கண்குடியில் மாரியம்மன் சிலையை தோண்டி எடுத்த காலத்தில் ஊர்க்குடும்பராய் இருந்தவர் சக்கா புக்கா (எ) இருளப்பக்குடும்பர் அவர் வழியில் இன்று இருக்கண்குடி ஊர்க்குடும்புகளில் ஒன்பது வகையறா இருக்கின்றார்கள் .அதுபோக மேலமடை கண்மாய் மடைகளுக்கான மடைக்குடும்பர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இவ்வகையில் குடும்பர் வகையறாவில் வருகின்ற வீரமகாளி குடும்பர் (இவரை வீரமாலி என்றும் அழைப்பர்) வழக்கம்போல் கிடாய் வெட்ட சென்றார். அந்த நாளில் கோவிலுக்கு வந்திருந்த ஒரு வயதான பாட்டியின் கம்மலை ஒரு திருடன் திருட , ஆபரணத்தை இலுத்த வேகத்தில் காதில் காயம்பட்டு இரத்தம் வர ரத்தத்துடன் அப்போதிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர். இதை விசாரிக்க காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். அப்போது கிடாய் வெட்டிவிட்டு சட்டையில் ரத்தக்கறையுடன் வருகிறார் வீரமகாளி. இதைப்பார்த்த அப்போதிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எந்த விசாரணையும் மேற்க்கொள்ளாமல் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை அடித்து விசாரணைக்கு இழுத்துசெல்கின்றனர். விசாரணையின் முடிவில் அவர் சட்டையில் இருந்தது ஆட்டின் ரத்தம்தான் என்று நிருபிக்கப்பட்டது. அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். வீட்டிற்கு வந்த வீரமகாளி இந்த வேலையை நாம் செய்ய போய்தான எந்த கேள்வியும் கேட்க்காமல் ஒருத்தர் வந்து நம்மை அடித்துவிட்டார். இதே வேறு ஏதேனும் காரணம் சொல்லி எவனாவது நம்மீது கைவைத்துவிட்டு திரும்பியிருக்க முடியுமா? அதிகாரியாகவே இருந்தாலும் நம்மிடம் தன்மையாகத்தானே பேசியிருப்பார் இப்படி எந்த கேள்வியும் கேட்காமல் நம்மீது கை வைத்திருக்க மாட்டாரே ? என்று பல்வேறு கேள்விகள் மனதில் ஓட இறுதியில் இந்த வேளையை இனி நாமும் செய்ய வேண்டாம் நமது பிள்ளைகளும் செய்ய வேண்டாம், யார் வேண்டுமானலும் அந்த பணியினை செய்துகொள்ளட்டும் என்று முடிவெடுக்கிறார். அதன் பின்னர் சிறிதுகாலம் இருக்கண்குடியை சேர்ந்த சிலர் அப்பணியினை செய்து வந்தனர். அதன் பின் யார்வேண்டுமானாலும் கிடாய்வெட்டிக்கொள்ளலாம் என்ற நிலை வந்ததது. அதனுடன் ஊர்க்குடும்பருக்கு கொடுத்துவந்த ஆட்டின் தலையும் , காலும் , மரியாதையும் மறைக்கப்பட்டது. அன்றைய காலகட்டதில் ஒரு காவல்துறை அதிகாரி செய்த சிறிய தவறு பின்னாளில் ஒரு வரலாற்றை அழித்துவிட்டது . பின்னர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் 2022 ல் இளைஞர்கள் ஒன்றிணைந்து வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்திக்கொண்டிருக்கின்ற சமயத்தில் , போலியாக ஒரு வரலாற்றை உருவாக்கும் நோக்கில் பூசாரி ஒருவரை கிடாய்வெட்டும் இடம் அருகில் நிறுத்தி ஆட்டு தலையும் ,காலும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் .அங்குள்ள வரலாறு தெரிந்த இளைய தலைமுறையினரால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி சின்ன சின்ன காரணங்களால் நமது அறியாமையால் நமது முக்கியத்துவத்தை நாமே உணராமல் நமது வரலாற்றை தொடர்ந்து இழந்து வருகிறோம் . தொடரும்.........
Tuesday, November 16, 2021
இருக்கண்குடி யில் ஆசீவகம்
*இருக்கண்குடியில் ஆசீவக குறியீடுகள் மற்றும் வரலாற்று தடயங்கள்*
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஆசீவகம் பற்றிய தகவல்கள் எதையும் காண முடிவதில்லை, ஆசீவகம் பற்றிய குறிப்புகள் கூட சமண, பவுத்த நூல்களில் மட்டுமே கிடைக்கிறது . மாறாக இந்த வாழ்வியல் நெறி என்பது மக்களின் மரபுடன் கலந்து இன்றளவும் வழக்கத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்போது வரை இந்த ஆசீவக கோட்பாட்டின்படி முன்னோர் வழிபாடாக, வழிமுறைகளாக இன்றளவும் இங்கு இருக்கும் தேவேந்திர குல வேளாள மக்கள் கடைபிடித்து வருகின்றனர். தமிழர்கள் பல்வேறு குலங்களாக பிரிக்கப்பட்டு வந்துள்ளனர். அவரவர் தன்மை, தோழில், முன்னோர் செய்த வீரச்செயல்கள், நற்பேறு, முதலியவற்றை கருத்தில்கொண்டு அந்த குலத்திற்கு பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். உதாரணமாக ஒரு தலைவன் தனித்து ஒரு சாதனை, வீர செயல் புரிந்த வராயின், அவன் சந்ததிகள் அவன் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக: கண்ணகுலம், அழகன்குலம், கோவக்குலம், கொற்றந்தை குலம், கோவன் குலம், சனகன் குலம் , செங்கண்ண குலம், சேரங்குளம் ,மணியன் குலம், மலையன்குலம், இன்னும் பல..... இவ்வாறு பிரிக்கப்பட்ட குலங்களில் சேரகுலம், பாண்டியர் குலம் போன்ற பெரிய பேரரசு குலங்களும் அடக்கம் .இத்தகைய குலங்களுக்கு ஆதியாக இருப்பது சந்திர குலம் .சந்திர குலம் என்று அழைக்கப்படுபவர்கள் சந்திரனின் உதவி கொண்டு தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் சந்திரனை தங்கள் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். சைவ வைணவத்திற்கு முன்பு இருந்த ஆசீவக காலகட்டத்திலேயே இந்த சந்திர குலத்தவர் நெற்றியிலும் குல, தெய்வ வழிபாட்டிலும் பிறை வடிவ நிலவையும் அதன் மையத்தில் ஒரு புள்ளியும் வைத்து நாங்கள் சந்திரனை குலதெய்வமாக வணங்கக்கூடிய சந்திர குலத்தைச் சார்ந்தவர் என்று உணர்த்தி வந்துள்ளன. இந்த சந்திர குலத்தில் இருந்து தோன்றியவர் தான் இன்று உலகம் முழுவதும் கடவுளாக வணங்கப்படும் பாண்டியர்களின் முதல் மன்னனான சிவன் .இதை உணர்த்தும் விதமாகத்தான் சிவன் சிலையில் தலையின் மீது பிறை நிலா பொறிக்கப்பட்டுள்ளது. சிவனுக்கு பின் வந்த பாண்டிய வேந்தர் பலரும் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள். நீங்கா புகழ் பெற்ற வேந்தர்கள் இறந்தபின் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். அவ்வாறு தெய்வமாக வணங்கப்பட்ட வேந்தர்களும் அவரது பீடங்களும் இந்திரன் இந்திரர் என்று அடையாளப் படுத்தப்பட்டது.
வேந்தன் (இறந்த பின்பு) -> தெய்வ வேந்தன் -> தெய்வேந்தன் -> தெய்வேந்திரன் -> தேவேந்திரன்.
சிவன் தலையில் பிறைநிலா வைத்து தன்னை சந்திர குலத்தவர் என்று அடையாளப்படுத்தியது போல ,இந்திரனும் நெற்றியில் பட்டையும் நாமமும் இல்லாது பிறைநிலா குறியீடு தனது அடையாளமாய் கொண்டுள்ளார். இந்த பிறை வடிவ குறியீடு என்பது இன்றளவும் இருக்கண்குடியில் தேவேந்திரகுல மக்களிடையே வழிபடும் தெய்வங்கள் இடையே காணப்படுகிறது. தற்போதுள்ள இருக்கண்குடி க்கு மேற்குப்புறம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் மூலஸ்தானத்திற்கு செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறத்தில் இந்த பிறை வடிவ குறியீடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .மேலும் அந்த கோவிலின் சில இடங்களில் பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்டு இது பாண்டியர் கோவில் என்று அடையாளப்படுத்துகிறது . மேலும் இங்கு தேவேந்திரகுல மக்கள் வழிபடும் மருதநில வேந்தரான பாண்டியர்கள் வழிபாட்டுடன் தொடர்புடைய இருபத்தொரு பந்தி பால் ராசா , இருபத்தொரு பந்தி புதியவராசா கோவிலில் உள்ள பூடங்களில் இந்த பிறை வடிவ குறியீடானது இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது. தென்பகுதியில் தேவேந்திரகுல மக்கள் வழிபடும் பெரும்பாலான கோவில்கள் ,ராசா கோவில்களில் இந்த பிறை வடிவ குறியீடை காணமுடியும்.
சந்திரகுலம்-> ( வேந்தன் மறைவுக்குப் பின்) இந்திர குலம்-> (ஆரியர் வருகைக்குப் பின்) தேவேந்திர குலம்.
தகவல்: Er. மு.காசிராசன் B.E.
இருக்கண்குடி.
தகவல் 2. இருக்கண்குடியில் ஆசீவகம்
Tuesday, November 9, 2021
இருக்கண்குடி உண்மை வரலாறு
இன்று இருக்கண்குடி மாரியம்மனை வைத்து பிரபலமாகிக் கொண்டிருக்கும் இருக்கண்குடி யின் வரலாறு பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு முன்பிருந்து தொடங்குகிறது. கி.பி. 1300 களில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்து வந்த இளவரசர் சுந்தரபாண்டியன் மற்றொருவர் சிதம்பரம் பகுதியை ஆட்சி செய்து வந்த இளவரசர் வீரபாண்டியன். சுந்தரபாண்டியனை விட வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவராய் வீரபாண்டியன் இருந்ததால் அடுத்த அரசராக வீரபாண்டியனுக்கு பட்டம் சூட்டினார் மன்னர் குலசேகரபாண்டியன். தனக்கு உண்டான உரிமை மறுக்கப்பட்டு வீர பாண்டியனை அரியணையில் அமர வைக்க முயற்சி செய்வதைக் கண்டு வெகுண்டு எழுந்து தன் தந்தையான குலசேகர பாண்டியனை கொன்று அரியணையில் அமர்ந்தான் சுந்தரபாண்டியன். இதனால் கோபமடைந்த வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையே போர் மூண்டது. முடிவில் தாக்குப்பிடிக்க முடியாமல் போரிலிருந்து பின்வாங்கி டெல்லியில் அலாவுதீன் கில்ஜியிடம் உதவி கோரினான் சுந்தரபாண்டியன். அலாவுதீன் கில்ஜியோ மாலிக் கபூர் தலைமையில் படையை உதவிக்கு அனுப்பி கி.பி .1310 மதுரை மீது போர்தொடுத்தார் முடிவில் உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த கதையாய் மதுரையைக் கைப்பற்றி கொள்ளையடித்து , பல பகுதிகளை சேதப்படுத்திவிட்டு தலைநகர் திரும்பியது மாலிக் கபூரின் படை. அதிலிருந்து தொடங்கியது பாண்டியர்களின் வீழ்ச்சி.
இதைப் பயன்படுத்தி கி.பி. 1311ல் சேர மன்னன் இரவிவர்மன் மதுரையை கைப்பற்றினான், அதன் பின்னர் தொடர் தோல்விகளாள் பாண்டிய பேரரசு பல சிற்றரசாக பிரிக்கப்பட்டது. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிற்றரசன் மதுரையை மீட்டு மீண்டும் மீன் கொடியை நாட்டினான். பாண்டிய சிற்றரசர்கள் இடையே ஒற்றுமை இன்றி மோதல் நடந்து கொண்டே இருக்கவே மதுரையை கைப்பற்றியது கிருஷ்ணதேவராயரின் நாயக்கர் அரசு. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த பாண்டிய பேரரசு பல சிறு நாடுகளாக சிற்றரசாக பிரிக்கப்பட்டது .அதை பாண்டிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட நாடுகளில் அளற்று நாடு, ஆன்மர்நாடு, இருஞ்சோ நாடு, கண்ட நாடு ,காண ஞாயிறுக்கை நாடு, கருநீலக்குடி நாடு, சாழ் நாடு, செங்கொடி நாடு ,திருமல்லி , வயலூர் நாடு, வெண்பை குடி நாடு, வெண்பு நாடு போன்ற நாடுல் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் அடக்கம். இவற்றுள் இருஞ்சோ நாடு என்பது கி. பி .831ல் அதாவது பாண்டிய பேரரசின் வீழ்ச்சி தொடங்கப்படுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கன்குடி (இருப்பைகுடி) கிராமத்தை மையமாக கொண்டு இருப்பை குடி கிழவன் என்னும் இருப்பை குடி எட்டி சாத்தன் என்னும் சிற்றரசன் ஆட்சி செய்துவந்துள்ளார். இவர் இருக்கண்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களை வெட்டி நீர் மேலாண்மையை ஏற்படுத்தி விவசாயத்திற்கு வழிவகை செய்துள்ளார். (டாக்டர் ராஜேஸ்வரியின் தேவேந்திரன் புத்தகம் பக்கம் எண் 18).
இருக்கண்குடி கிராமத்திற்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றுள் வரலாற்று பூர்வமாக ஆதாரத்துடன் விளக்க இயலுவது இலுப்பை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இலுப்பைகுடி என்று அழைக்கப்பட்டு பின்னர் இருப்பை குடி என்று மருவபெற்று தற்போது இருக்கண்குடி என்று அழைக்கப்படுகிறது. இருப்பைகுடி என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் இதை நிரூபனம் செய்கின்றன.
" மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"
- தொல்காப்பியர்.
பாலை என்பது தனி நிலம் அல்ல குறிஞ்சியும் முல்லையும் தன் நிலை மாறி செழிப்பிழந்து வறண்ட பகுதியை பின்னாளில் பாலை என்று அடையாளம் ஆயிற்று. எனவே தொல்காப்பியர் நால்வகை நிலத்தையும் அதன் தெய்வத்தையும் வகைபடுத்தியுள்ளார் அதில் மருத நிலக் கடவுளை வேந்தன் என்று அடையாளப்படுத்துகிறார் .திணையில் முதலாவது குறிஞ்சி என்றாலும் மனித நாகரிகம் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்னவோ மருதத்திணையில் வேளாண் மரபினர் இடையே தான். தேவைக்காக உணவு சேகரிக்கும் வழக்கம் மாறி தனது சமுதாயத்திற்காக மானுட சமூகத்திற்காக முதன் முதலில் உணவை உற்பத்தி செய்யத் தொடங்கியது இந்த மருத நிலத்து வேளாளர் என்று அழைக்கப்படக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் என்னும் மள்ளர் மக்கள்தான். வேளாளர் என்ற சொல் வேளாண்மை செய்யக்கூடிய மருதநில விவசாயிகளை இ குறிக்கிறது என்று தேவநேயப் பாவாணர் தமிழர் வரலாறு என்னும் தனது நூலில் கூறுகிறார். வேளாளருக்கும், வேளாருக்கும் வேறுபாடு உண்டு. வேள் என்றால் மண் என்றும் தலைவன் என்றும் இருபொருள் படும். வேளார் = வேள்+ ஆர் மண்ணை வைத்து பிழைப்பு/ தொழில் செய்பவர்கள், உதாரணத்திற்கு :மண் பானை, மண் பொம்மை போன்ற பொருட்கள் செய்து வணிகம் செய்யக்கூடியவர்கள் வேளார் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர் = வேள்+ஆள்+அர்(வேள்=மண், ஆள்=ஆள்பவர்/ஆளுமை, அர்=வினைமுற்று விகுதி)
வேளாண்மை = வேள்+ஆண்மை
ஆண்மை எனப்படுவது ஆடவரை குறிக்காது, மாறாக ஆளும் தன்மை எனப் பொருள்படும், அவ்வாறு நிலத்தை வேளினை தனது தேவைக்கேற்ப பண்படுத்தி அந்த நிலத்தை ஆளும் தன்மை வேளாண்மை எனப் பொருள் காணப்படுகிறது. நிலத்தை ஆளும் தன்மை உடையவர் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு கி .பி. 831 கால கட்டத்திலேயே மருத நில மக்களான குடும்பர், மடையர், வேளாளர் என அழைக்கப்பட்டு தற்போது தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் மருதநில மக்கள் ஏரி குளங்களை வெட்டி, நீர் மேலாண்மை ஏற்படுத்தி இருஞ்சோ நாடு என்னும் சிற்றரசாக வளமுடன் இருந்த நாடு தான் இன்றைய இருக்கன்குடி.
இங்கு வாழ்ந்த இருக்கண்குடியில் பூர்வ குடிமக்களாகிய மருதநில வேளாண் குடிமக்கள் இயற்கையோடு ஒன்றி பாண்டிய மக்களுக்கே உரித்தான ஆதி வழிபாட்டு முறைகளான மால் (திருமால், பெருமால்) வழிபாடு , சேயோன் (முருகன்) வழிபாடு, வேந்தன் (இராசா, அரசன்)வழிபாடு, முன்னோர் வழிபாடு என சைவ வைணவ சமயங்களுக்கு முன்பிருந்த தமிழர்களின் ஆதி வாழ்வில் நெறியான ஆசீவக கோட்பாட்டின்படி வாழ்ந்து வந்துள்ளனர். ஆசீவகம் என்பது தமிழ் பூர்வகுடிகளான பாண்டிய மக்கள் மருத நில மக்களின் நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் செழிப்பாய் வளர்ந்திருந்த வாழ்வியல் முறை இதற்குப் பின்னரே சைவம், வைணவம், சமணம் ,பௌத்தம் போன்ற சமயங்கள் தோன்றின. ஆசீவக கோட்பாடு என்பது 18 நிலைகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட நிலைகளுக்கு குறிப்பிட்ட நிறம் அடையாளமாய் காட்டப்படும் .கருப்பு வண்ணத்தில் தொடங்கி வெள்ளை வண்ணத்தில் முடிவடையும் இவ்வாறு 18 நிலைகளையும் கடந்த ஒருவன் மற்றவர்களின் சந்தேகங்களுக்கு , குறைகளுக்கு தீர்வு கொடுக்க இயலும். அத்தகைய நிலையை அடைந்த ஒருவனை அய்யன் என்று அழைத்து வந்துள்ளனர். பின்னாளில் இவரை மரியாதை நிமித்தமாய் "ஆர்" என்கிற விகுதி சேர்த்து அய்யனார் என்று அழைத்துள்ளனர். அய்யனாருக்கு (18 நிலை கடந்த துறவிகளுக்கு) வழங்கப்பட்ட வேறு பெயர்கள் :
அய்யன் -> அய்யனார் -> ஐயனார்
சாத்தன் -> சாஸ்தா
முனி
சித்தன் -> சித்தர்
அண்ணன்
இவ்வாறு 18 நிலைகளைக் கடந்து மனிதர்களை பின்னாளில் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதோடு குறிஞ்சி நிலக் கடவுளான திருமால் வழிபாடும் முல்லை நிலக் கடவுளான சேயோன் (முருகன்) வழிபாடும் மருத நிலத்திற்கு உரித்தான மருதநில வழிபாடான வேந்தன் (ராசாக்கள்) வழிபாடும் ஆசிவக கோட்பாட்டின் ஆதியான முன்னோர் வழிபாடும் ஒருசேர இருக்கன்குடியில் மருத நில மக்களாகிய மள்ளர் மக்களிடத்தே வணங்கப்பட்டு வந்துள்ளது .
ஆசீவகம் பெயர்க்காரணம்:
ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஈவு என்பது விடை, தீர்வு என்று பொருள் படும் .ஆசு என்பது செம்மை செழுமை எனப் பொருள்படும். அந்த காலத்தில் செம்மையான கவியை ஆசுகவி என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசீவகம் என்பது செம்மையான தீர்வு கிடைக்கும் இடம் என பொருள்படும். (உணவு கிடைக்கும் இடம் உணவகம் என்று கூறப்படுவது போல அருமையான தீர்வு கிடைக்கும் இடம் என்பதால் ஆசீவகம் என்று அழைக்கப்பட்டது).
தகவல் : Er. மு.காசிராசன் B.E., இருக்கண்குடி.
தகவல் 1: இருக்கண்குடி வரலாறு
Sunday, August 15, 2021
மர்ம கோட்டை வாசல்
*மர்ம கோட்டைவாசல்*
🖋️மு.காசிராசன்
_தொடர்-2_
இதுவரை...
ஆர்வத்தின் மிகுதியால் பொன்மேடு சென்றடைந்த கரிகாலன் அதிசய கோட்டை நுழைவாயிலில் அதன் குறிப்பு (அ) எச்சரிக்கை கண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும்போது டம் என்று ஒரு சப்தம் கேட்டது.
இனி.........
டம் என்ற சத்தத்தை கேட்டதும் உடல் சிலிர்க்க சற்று கிலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தான் சுமார் ஐந்து அடி உயரமுள்ள வாட்டசாட்டமான ஆள் தான் கரிகாலன், வீரத்திற்கும் தைரியத்திற்கும் குறைவில்லை என்றாலும் இடம் நேரம் மற்றும் சூழல் பயத்தை ஏற்படுத்துவதாக தான் இருந்தது. என்ன சப்தம் என்று அவன் சிந்திக்க முற்படும் முன் மீண்டும் அதே சப்தம் இரட்டையாய் டம் டம் என்று கேட்டது. மூன்றாவது முறை ஒலிக்கும் முன் அது போர்முரசு என்பதை யூகித்து அறிந்து கொண்டான். முரசின் ஒலி எழுந்தவுடன் அந்த கோட்டையின் வாசல் பெரும் இரைச்சல் சப்தத்துடன் திறக்கிறது, திறந்ததும் அவன் கண்ட காட்சி அவனை பிரமிப்பில் ஆழ்த்தியது மிகப்பெரிய பொன்னால் செய்யப்பட்ட கோட்டை ,மின்னும் மாளிகைகள் என கண்ணால் காணும் இடமெல்லாம் பளிச்சிடும் கோட்டையை இருக்கும் என்று எண்ணி அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி அங்கே எதுவும் இல்லை ஒரே ஒரு நடுகல் ஒரு கழுமரம் தவிர்த்து சுற்றிலும் வெறும் சுத்த ஆற்று மணல் மட்டுமே நடுகள் எனப்படுவது முந்தைய காலத்தில் போரில் தனது வீரத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியவனுக்கும் வீரமரணமடைந்த தளபதி போன்றோருக்கும் ஓர் இனத்தை காப்பாற்ற தனது இன்னுயிரை கொடுத்த மனிதர்களுக்கும் அவர்கள் நினைவாய் நடும் கல் இந்த நடுகல் ஆகும் அந்தக் கல்லில் இறந்த வீரனின் உருவம் அவன் செயல் அவன் மரணம் பற்றிய குறிப்புகள் இருக்கும் அந்த தலைவனின் புகழ் அடுத்த தலைமுறையினர் அறிவதற்காக இந்த நடுகல் முறையை நமது முன்னோர்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்தபடியாக இருக்கும் கழு என்பது கழுமரம் என்று அறியப்படுகிறது ஒரு அரசின் அல்லது நாட்டில் கொடும் குற்றம் செய்தோருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச கொடுமையான தண்டனை இதுவாகும். ஏழு அடிக்கு மேல் உள்ள ஒரு மரத்தின் உச்சியை கூர்மையாக்கி அது தண்டனைக்குரிய வரை உடலில் துணி இன்றி அந்த மரத்தின் எண்ணெய் தேய்த்து கை கால்களை கட்டி அமர வைப்பர் ,அந்தக் கூர்மையான மரமானது அவன் உடலின் ஒரு பகுதி வழியே சென்று மற்றொரு பகுதியை கிழித்துக்கொண்டு வெளியே வரும் பயங்கர வேதனையுடனும் ஓலத்துடனும் அந்த உயிர் பிரியும் இறந்த நபரின் உடலும் கூட நாய் நரிக்கு இரை ஆகுமே தவிர அடக்கம் செய்யப்பட மாட்டாது. மிகப்பெரிய குற்றம் செய்தவருக்கு மட்டுமே இந்த தண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது இந்த இரண்டையும் கண்டவுடன் "இது யாருக்கான நடுகல்? கண்டிப்பாக இங்கு அரண்மனை இருந்திருக்க வேண்டும். அது இப்போது எங்கே? அந்த அரசனின் பெயர் என்னவாக இருக்கும் ? "என்ற ஆயிரம் வினா நொடிப்பொழுதில் அவன் மனதில் நிரம்பிக் கொண்டிருந்தது இருப்பினும் அந்த பின்குறிப்பு எச்சரிக்கை வரிகள் உள்ளே காலடி எடுத்து வைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத ஒன்று அவன் கண்ணில் பட்டது அந்த நடுகல்லுக்கு சற்று தொலைவில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்தாள் இளம் கன்னி ஒருத்தி முகம் சரிவர தெரியவில்லை என்றாலும் அவள் கார்மேக கூந்தலும் இடையழகும் அவள் முகத்தை காண வேண்டும் ,அவள் கண்ணழகு முன்னழகும் காணவேண்டும் என்று துடிக்க வைத்தது. அவன் வயதின் காரணமோ என்னவோ அவனையும் அறியாமல் கோட்டை வாயிலை தாண்டி காலை வைத்து வைத்தது கோட்டைக்குள் நுழைந்தன சுற்றிலும் மணல் மீது சிறு சிறு பனை மரங்கள், உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டிய பனைகள் முட்டி உயரம் தான் இருந்தது சுற்றிலும் எதையும் நோக்காது அவன் ஆர்வத்துடன் காண எண்ணிய நடுகல்லையும் காணாது . அவன் கன்னியை நோக்கி நடந்தான் "சரக் சரக்" என்ற சப்தம் திரும்பிப் பார்த்தான் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அவளை நோக்கி நடந்தான். யாரோ தன்னை பின்தொடர்வதை போல் உணர்ந்தான் இருப்பினும் கன்னி அவள் முகம் காண வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நெருங்கினான் .தென் திசை நோக்கி அமர்ந்து இருந்தால் அந்தக் கண்ணி கைகளில் பொன் வளையல் ,கூந்தலை பின்னி தொங்கவிட்டிருந்தாள் அந்த கூந்தல் தரையை உரச பூச்செடிகளை பூக்கள் தயாராக இருந்தது நிலம். மெல்ல "யார் நீ? "என்று கேட்டான். பதில் ஏதும் வரவில்லை மீண்டும் "யார் நீ? இங்கே எப்படி வந்தாய் ?" என்று சற்று குரலை உயர்த்தி கேட்டான். பதில் ஏதும் வரவில்லை சற்று பயம் கலந்த தயக்கத்துடன் அவள் தோளில் கை வைத்தான். அவள் எழுந்து திரும்பி நின்றாள் முகத்தில் இமைகள் இமைக்க மறந்து, ஆடாமல் அசையாமல் இருந்தான் அவள் முகம் அவனை அப்படி மாற்றியது. "இவள் பூலோக பெண்ணாக இருக்க" முடியாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் .அழகிய மீன் போன்ற விழிகளை உடையவள் காதில் பொன்னால் ஆன தோடு அணிந்து கழுத்தில் எளிமையான பொன்னாபரணம் அணிந்திருந்தாள் பொன்னழகை மிஞ்சும் அளவுக்கு அந்த பென்னழகு பார்ப்பவரை மயக்குமாறு இருந்தது தயங்கியபடி நின்றான் கரிகாலன். "இவள் பூலோக பெண்ணாக இருக்க முடியாது. இவள் தேவலோக பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் " என்று எண்ணிக் கொண் அவள் குரல் அழகை கேட்க துடித்து "உன் பெயர் என்ன?" என்று கேட்டான் அந்த அழகு முகம் மாறத் தொடங்கி அவள் விழிகள் அவளுக்கு பின்னால் பாய்ந்தது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கை அவன் தோளைப் பற்றியது, சுமார் ஆறடி மதிக்கத்தக்க ஒரு கரிய நிழல் அவன் முன் தெரிய இதைத்தான் அவள் பார்த்தாளோ என்று பயம் கலந்த சிந்தனையுடன் ஒரு நிமிடம் அவன் இதயத்துடிப்பு அவனிடத்தில் இல்லை. படபடவென இதயம் துடிக்க கிலியுடன் மெதுவாக பின்னே திரும்பினான் கரிகாலன் ........
தொடரும்........
Thursday, August 5, 2021
மர்ம கோட்டை வாசல்
அனைவருக்கும் வணக்கம்
நீண்ட நாட்களாக என் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மர்ம முடிச்சை சில வரலாற்றுப் புனைவுகள் துணைகொண்டு அவிழ்க்கும் முயற்சியே இந்த சிறிய தொடர்கதை இந்த இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்று எண்ணுகிறேன் இப்படிக்கு உங்கள் காசிமணி என்ற மு.காசி ராசன்
*மர்ம கோட்டைவாசல்*
_தொடர் 1_
ஆகாய கங்கையை கண்டவர் சிலர் மட்டுமே எனினும் பல பூலோக கங்கைகள் இந்த பூமியை செழிக்க வைத்து அழகு படுத்திக் கொண்டுதான் இருக்கிறது அப்படி இரண்டு கங்கைகள் கொஞ்சி விளையாட வேளாண் மரபினர் மண்ணை ஆள பூலோக சொர்க்கம் போலிருந்தது இருகங்கைகுடி எனும் அழகிய கிராமம் அந்த கிராமத்தில் முத்துக் கருப்பனுக்கும் பொன்னம்மாளுக்கும் ஒரே மகனாய் பிறந்தவன்தான் கரிகாலன் ஓங்கி உயர்ந்த பணக்கார குடும்பம் இல்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பம் பசி என்று யாரும் வந்துவிட்டால் உணவு கொடுத்து உபசரித்து அனுப்பி வைக்கும் மரபு உடையவர்கள், தனது மகன் மருத்துவர் ஆகணும் பொறியாளர் ஆகணும் என்று பல்வேறு ஆசைகள் பெற்றோருக்கு இருந்தாலும், அவன் மனம் என்னவோ வரலாற்றிலும் மர்மங்களும் சென்றுகொண்டிருந்தது. இருபது வயதை கடந்த பின் அந்த ஆர்வம் அதிகரித்தது. தனது கிராமத்தில் உள்ள வழக்கங்கள் குடும்ப முறை என அனைத்தையும் ஆராயத் தொடங்கினான் கரிகாலன். அன்றைய காலகட்டத்தில் மடை காவல் அதிபதிகளை மடையர்கள், மடை குடும்பர்கள் ,என்று அழைக்கும் வழக்கம் இருந்தது .இவர்களே மடைதிறந்து வயலுக்கு நீர் பாய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளாய் இருந்துள்ளனர். இவற்றை எல்லாம் ஊர் பெரியவர்கள் மூலமாகவும் தனது மாமாவிற்கு மடை அதிகாரம் இருந்ததால் அவர் மூலமாகவும் அறிந்து கொண்டு அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி கொண்டிருந்தான். இவனது இந்த ஆர்வம் இவனை அரியணை வாயிலுக்கு கொண்டு செல்லும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அதே ஆர்வம் அவனை ஆபத்தின் வாயிலுக்கு கொண்டு சென்றது .அந்த கண்மாய் மடையில் ஒரு சிறு கல்வெட்டு கரிகாலன் கண்ணில்பட்டது, கீழே இறங்கிச் சென்று உற்று நோக்கினால் அதில் ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதற்கான ஆதாரம் தென்பட்டது. அந்த வரிகளை கரிகாலனால் வாசிக்க முடிந்தது இந்த கிழவனேரி கண்மாய் இலுப்பைகுடி கிழவனாரால் 730ல் பொன்னகர அரசர் அனுமதியுடன்திறந்து வைக்கப்படுகிறது என்று எழுதி இருந்தது. ஆச்சரியத்தில் கரிகாலனின் கண் விரிந்தது ,எங்கே அந்த பொன்னகரம் அதை ஆண்ட அரசர் யார் என்ற ஆர்வம் அவனை தூண்டியது சரியாக தூங்காமல் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். பெரியவர்களிடம் விசாரித்தான், பலரின் அறிமுகத்துக்குப் பின் அவனுக்கு கிடைத்தது ஒரு தடயம் பொன்மேடு. அதே இருகங்கைகுடிக்கு தெற்கே அமைந்துள்ள பகுதி தான் பொன்மேடு. இதைப்பற்றி தந்தை முத்துக்கருப்பனிடம் விசாரித்தான் கரிகாலன். அவரும் அதில் உள்ள அமானுஷ்யத்தை, மர்மத்தையும் விளக்கிக் கூறினார். யாரும் தனியே நடந்து செல்ல பயப்படும் பகுதிதான் அந்த பொன்மேடு காரணம் திடீரென சிரிப்பு சப்தமும் ,வாள்வீச்சு சப்தமும், ஒப்பாரி வைத்து அழும் சப்தமும் கேட்கும் என்றும் அமாவாசை தினத்தில் அந்த பக்கம் யாரும் போவது கிடையாது என்றும் கூறினார். ஏனென்று கரிகாலன் வினவ அது பற்றி தனக்கு சரியாக தெரியாது எனவும் ஆனால் அன்று அந்த பக்கம் செல்பவர்கள் இதுவரை திரும்பியது இல்லை எனவும் கூறினார். ஒரு முறை சென்று பார்த்தால்தான் என்ன என்று கரிகாலன் கூற உடனே பொன்னம்மாள் அவனைத் திட்டினாள் உன் ஆர்வம் எல்லை மீறுகிறது காலா அதீத ஆர்வம் நம்மை ஆபத்தில் சிக்க வைத்து விடும். இந்தப் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள் என்று கடிந்து கொண்டாள். சரிமா விடு என்று பேச்சுக்கு சொன்னாலும் அவன் எண்ணம் பொன் மேடை நோக்கியே இருந்தது அம்மாவாசை நெருங்க நெருங்க அவன் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்த அமாவாசையும் வந்தது ,வீட்டில் பெற்றோர் உறங்கி விட்டதை உறுதிசெய்த கரிகாலன் கையில் விளக்கை எடுத்துக்கொண்டு பொன்மேடு நோக்கி நடந்தான். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பொன்மேடு சென்றடைந்தான். நேரம் 11 மணியைத் தாண்டியது அவன் வாழ்வை புரட்டிப் போடும் நேரம் நெருங்கியது, சரக் என்ற சப்தம் ஒரு நொடியில் பயந்தவன் பின்னே திரும்பி யார் என்று கேட்டான் பதில் ஏதும் வரவில்லை, மீண்டும் சரக் சரக் என்று சத்தம் சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை ஆள் நடமாட்டமும் இல்லை அவன் கையில் வைத்திருந்த விளக்கை தவிர வெளிச்சம் தர எதுவுமில்லை திடீரென ஆந்தை வீர் கொண்டு அலறியது மற்ற பறவைகளெல்லாம் பறக்க ஆரம்பித்தன, பறவைகளின் சத்தமும் கேட்க என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று எதுவும் புரியாதவனாய் சற்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான் அப்பொழுதுதான் அவன் சற்றும் எதிர்பாராத அந்த விடயம் நடந்ததும் அவன்முன் மிகவும் பழமையான ஒரு கோட்டையின் நுழைவு வாயில் பூமியிலிருந்து மேலே எழும்பி கொண்டு வந்து நின்றது. அதிசயத்து அவன் அந்த வாயிலை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கற்களால் மிக நேர்த்தியாக தெளிவாக செய்யப்பட்ட நுழைவு வாயில் அது அதன் உச்சத்தில் இரண்டு வாள்களுக்கு நடுவில் பிறைச்சந்திரன் பக்கவாட்டில் மீன் சின்னமும் கதவின் மற்ற பகுதிகளில் சிறு சிறு மீன் சின்னமும் மீன்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவது போன்ற காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தன மத்தியில் " *_பொன்னகர் அரண்மனைக்கு செல்லும் நுழைவு வாயில்*_ "என்றும் கீழே குறிப்பில் , "__உள்ளே செல்ல அனுமதி உண்டு திரும்பி வர நினைத்தால் உயிர் பறிக்கப்படும்__ " இது காலன் கட்டளை என்றும் எழுதி இருந்தது அந்த வார்த்தை அவனை அச்சுறுத்தியது உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். கரிகாலன் ஒரு அடி முன் எடுத்து வைக்க டம் என்று ஒரு சத்தம் கேட்டது பயத்துடன் இரண்டடி பின்வாங்கினான் அப்போது ..............
தொடரும்.......
🖋️மு.காசிராசன்
Thursday, June 10, 2021
இது போதும் எனக்கு
Wednesday, December 16, 2020
வழி சொல்
உன் விழி ஈர்ப்பு விசையாலே
திசைமாறிச்சென்ற என்னை
உன் மொழி இன்பத்தில்
திசைதிருப்பிய கயல்விழியாளே
என் வழி மறந்து போனேன்
நீயும் நானும் கரம்கோர்த்துநம்வழி செல்வோமா...?!
Wednesday, December 2, 2020
என்(னை) காதலி
உன் கடைக்கண் பார்வை
போதுமடி
நான் கட்டுக்கட்டாய்
கவிதை எழுத
உன் புன்னகை ஒன்று
போதுமடி
புது புத்தகம் ஒன்றை
நான் படைக்க...
Subscribe to:
Posts (Atom)
கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...
